Krishnagiri: திக்குமுக்காடும் கிருஷ்ணகிரி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!
Cyclone Fengal: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி செல்லும் சாலையில் உள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக சாலையில் இருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி செல்லும் சாலையில் உள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக சாலையில் இருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Historic rainfalls in Uthangarai. All the lakes and ponds are full to the brim. Current situation of Salem to Tirupattur highway near Uthangarai busstand. pic.twitter.com/t7dwClNQJI
— sureshkumar (@visitask) December 2, 2024
மேலும் வெள்ளம் தொடர்பான உதவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருவதாகவும், 1077 என்ற எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் உதவிகளை பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி நியமனம் செய்துள்ளார்.
மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தொடந்து கள நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும், இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம் எனவும் எக்ஸ் வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 50 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரும்பும் திசையெங்கும் தண்ணீராக உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் அதிகமாக உள்ள இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள் அருகே மக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் புயல் வலுக்குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதே இப்படி கனமழை கொட்டித் தீர்க்க காரணமாகும்.