Krishnagiri: திக்குமுக்காடும் கிருஷ்ணகிரி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

Cyclone Fengal: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி செல்லும் சாலையில் உள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக சாலையில் இருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Krishnagiri: திக்குமுக்காடும் கிருஷ்ணகிரி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஊத்தங்கரை பகுதி

Updated On: 

02 Dec 2024 14:00 PM

கிருஷ்ணகிரி: ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி செல்லும் சாலையில் உள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக சாலையில் இருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளம் தொடர்பான உதவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருவதாகவும், 1077 என்ற எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் உதவிகளை பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி நியமனம் செய்துள்ளார்.

Also Read: Train Service: வெள்ளத்தில் மிதக்கும் விழுப்புரம்.. தென்மாவட்ட ரயில்கள் ரத்து, பாதி வழியில் நிறுத்தம்!

மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தொடந்து கள நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும்,  இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம் எனவும் எக்ஸ் வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 50 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரும்பும் திசையெங்கும் தண்ணீராக உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் அதிகமாக உள்ள இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள் அருகே மக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் புயல் வலுக்குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதே இப்படி கனமழை கொட்டித் தீர்க்க காரணமாகும்.

Also Read: H Raja: சிக்கிய ஹெச்.ராஜா.. 2 வழக்குகளில் தலா 6 மாத சிறை தண்டனை விதிப்பு!

கனமழை பெய்ய காரணம் என்ன?

இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23 இடங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ.,  விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ., தர்மபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ., கள்ளக்குறிச்சியில் திருப்பாலபந்தலில் 32 செ.மீ., மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ.,  மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாணி ஆற்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் வலிமை இழக்க அதிக நேரம் எடுத்ததால் மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இப்படியான கனமழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் மிக மிக குறைவான வேகத்தில் நகர்ந்த இந்த புயல் எங்கெல்லாம் நிலை கொண்டிருந்ததோ அங்கெல்லாம் கனமழை பெய்திருப்பது. கடந்த ஆண்டு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஒரே நாளில் அதிக கனமழை பெய்ததற்கு மிக முக்கிய காரணம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் ஊத்தங்கரை பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக துணை பொதுச்செயலாளரும், மாவட்ட சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். 

40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?
கலைக்கட்டும் கல்யாணம்... சோபிதாவின் போட்டோஸ் இதோ
விஜய்யா? ரஜினியா? யாருக்கு அதிக சம்பளம்?