Tasmac: மக்கள் வேண்டாம் என்றால் டாஸ்மாக் கடை இருக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!
Chennai High Court: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் உள்ள காமன் தொட்டி கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை அந்த பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடை இருந்த இடத்திலிருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் உள்ள காமன் தொட்டி கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை அந்த பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது தொடர்பான மனுவில், “டாஸ்மாக் கடைக்கு குத்தகை காலம் முடிந்த பிறகும் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நான் புகார் அளித்தேன். அதனால் எனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என சுந்தர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாமல் எத்தனை டாஸ்மாக் கடைகள் நடத்தப்படுகிறது என்ற அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தார்.
Also Read: Cinema: யூட்யூப் சேனல்களை உள்ளே விடாதீங்க..தியேட்டர்களுக்கு பறந்த உத்தரவு
நீதிபதி சரமாரியாக கேள்வி
இப்படியான நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அதில் எதிர்மனுதாரர் சுந்தர் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கும் கடையை மூன்று நாட்களுக்கு முன்பாகவே காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞரான ரவீந்திரன் மற்றும் டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞரான சதீஷ் ஆகியோர் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு குத்தகை முடிந்த போதும் கடையை காலி செய்யாமல் இருந்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் எதிர்த்து கேள்வி கேட்டால் காவல்துறையினரை வைத்து வழக்கு தொடர்வீர்களா எனவும், ஏன் இப்படியெல்லாம் அடாவடி செய்கிறீர்கள் எனவும் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.
Also Read: Crime: தொழிலதிபரிடம் ரூ.2.2 கோடி மோசடி.. வங்கி கணக்கை வாடகைக்கு விட்ட ஆட்டோ ஓட்டுநர்!
நோ சொன்னால் காலி செய்யுங்கள்
பின்னர், “மக்களுக்கு எதிராக செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம் சொந்த வருமானத்தை மட்டுமே பார்க்கிறது. மீண்டும் இதுபோல் புகார் வந்தால் நீதிமன்றம் தீவிரமாக கருதி கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என நீதிபதி வேல்முருகன் எச்சரித்தார். தொடர்ந்து, “கடை வேண்டாம் என அப்பகுதி மக்கள் கூறினால் போலீசாரை வைத்து கடைகளை நடத்திவீர்களா? ”என கேள்வி எழுப்பிய நீதிபதி, “அரசு நிலம் என்றால் சட்டத்தை பயன்படுத்தும் போது தனி நபர்களுக்கு என்றால் சட்டம் இல்லையா?” என கேட்டார். அரசு சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என கூறிய அவர், சுந்தருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.
தொடர்ந்து குத்தகை காலம் முடிந்தால் டாஸ்மாக் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், ஒருவேளை அப்பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என மக்கள் கூறினால் அந்த கடைகளை மாற்ற வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகள்
தமிழக அரசுக்கு வருமானத்தை வாரி வழங்கும் துறைகளில் மிக முக்கியமானது டாஸ்மாக். ஏ,பி,சி,டி என 4 வகைகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் தமிழகத்தின் 4,829 கடைகள் செயல்பட்டு வருகிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது ரூ. 438 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இது கடந்த ஆண்டை விட குறைவானது என்றாலும் டாஸ்மாக்கில் வருமானம் 4 நாள் அதிகரித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.