5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tiruvarur: தூய்மை பணியாளர் மகள் டூ நகராட்சி ஆணையர்.. மன்னார்குடி துர்காவின் வெற்றி கதை!

Mannargudi: தான் படும் கஷ்டத்தை தனது ஒரே மகளான துர்கா எப்போதும் அனுபவிக்கக்கூடாது என்பதை நினைத்த சேகர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் துர்காவை படிக்க வைத்தார். இப்படியான நிலையில் கடந்த ஜூன் மாதம்  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.  இதில் தேர்ச்சி பெற்ற துர்கா நகராட்சி ஆணையர் பதவியை தேர்வு செய்துள்ளார். அப்பா தூய்மை பணியாளராக வேலை செய்த அதே துறையில் மகள் நகராட்சி ஆணையராக பதவியும் ஏற்றுள்ளார்.

Tiruvarur: தூய்மை பணியாளர் மகள் டூ நகராட்சி ஆணையர்.. மன்னார்குடி துர்காவின் வெற்றி கதை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Nov 2024 11:25 AM

திருவாரூர்: தனது அப்பா தூய்மை பணியாளராக பணியாற்றிய நகராட்சி துறையில் ஆணையராக மகள் பதவியேற்றுள்ள சம்பவம் மன்னார்குடியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி அருகே உள்ள புதுபாலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தூய்மைப் பணியாளராக மன்னார்குடி நகராட்சியில் பணியாற்றி வந்த துர்கா கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மகள் துர்கா தான் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பதவியேற்றுள்ளார்.  இவர் தனது கணவர் நிர்மல் குமார் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்போது குடும்பத்துடன் மதுராந்தகத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தந்தை சேகர் மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில் அதே நகராட்சி துறையில் ஆணையராக பதவியேற்றுள்ள துர்காவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

கஷ்டம் பாராமல் படிக்க வைத்தவர்.

தான் படும் கஷ்டத்தை தனது ஒரே மகளான துர்கா எப்போதும் அனுபவிக்கக்கூடாது என்பதை நினைத்த சேகர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் துர்காவை படிக்க வைத்தார். இப்படியான நிலையில் கடந்த ஜூன் மாதம்  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.  இதில் தேர்ச்சி பெற்ற துர்கா நகராட்சி ஆணையர் பதவியை தேர்வு செய்துள்ளார். அப்பா தூய்மை பணியாளராக வேலை செய்த அதே துறையில் மகள் நகராட்சி ஆணையராக பதவியும் ஏற்றுள்ளார்.

Also Read: TRUST Exam 2024: மாதம் ரூ.1000 உதவித்தொகை.. 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தன்னுடைய இந்த வெற்றி தொடர்பாக துர்கா கடந்த ஜூன் மாதம் ஊடகத்தினரிடம் பேசினார். அப்போது, “ என்னுடையது சின்ன குடும்பம் தான். நான், அப்பா,அம்மா என 3 பேர் மட்டும் தான் இருந்தோம். நாங்கள் மன்னார்குடி புதுபாலம் பகுதியில் வசித்து வந்தோம். அப்பா மன்னார்குடி நகராட்சியில் ரூபாய் 800 சம்பளத்திற்கு தூய்மை பணியாளராக ஆரம்பத்தில் வேலைக்குச் சேர்ந்து பணி செய்து வந்தார். குப்பைகள் அள்ளுவது, அடைப்பு ஏற்பட்டால் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது , செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவார்.

அப்பா தூய்மை பணியில் ஈடுபடுவதை நான் பல நாள் பார்த்து கண் கலங்கியிருக்கிறேன். வேலைக்கு செல்லும் போது சுத்தமாக இருக்கும் அப்பா வீட்டுக்கு திரும்பி வரும்போது சாக்கடை துர்நாற்றத்துடன் வருவார். நான் ஓடோடி சென்று அவரை அணைத்துக் கொண்டாலும் இந்த நாற்றம் என்னோடு போகட்டும் என கலங்கியபடியே தெரிவிப்பார். சாக்கடை சுத்தம் செய்துவிட்டு வந்து பல நாட்கள் சாப்பிடாமல் இருந்துள்ளார். கேட்டால் சாப்பாட்டில் கைவைக்கும் போது சாக்கடை நாற்றம் அடிப்பதாக சொல்லி பட்டினியாக இருப்பார்.

அர்ப்பணிப்புடன் கூடிய வெற்றி

அவர் மீது ஏராளமான ஏளன பார்வை, ஏளன பேச்சு ஆகியவை இருந்தது. ஆனால் அதனையெல்லாம் கடந்து  என் அப்பா சேகர் தனக்கான வேலையை அர்ப்பணிப்புடன் செய்தார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும் என்னை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனக்காக அவருடைய ஆசைகள் எல்லாம் தியாகம் செய்யப்பட்டது. என் மகள் என் வேலைக்கு வந்திடக் கூடாது என அடிக்கடி கூறுவார்.

என்னுடைய மகள் படிச்சு நல்ல அரசு வேலைக்கு போக வேண்டும் என எல்லோரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு அவர் கலங்குவதை பார்த்து சங்கடமாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன். அப்பா கொடுத்த உத்வேகத்தால் அவரது ஆசை நிறைவேற்ற நன்றாக படித்தேன். 10 மற்றும்  12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மார்க் எடுத்தேன். மன்னார்குடியில் அரசு கல்லூரியில் சேர்ந்து கல்லூரி படிப்பை முடித்தேன்.

குடும்பச் சூழல் காரணமாக எனக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு 2 குழந்தைகள் ஆன பிற்பாடு  குடும்பம் நடத்தவே எனக்கு நேரம் சரியாக இருந்தது. அதேசமயம் என்னுடைய கனவு நிறைவேறாமல் போய்விட்டதே என்று நிறைய நாள் வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால்  கணவர் நிர்மல் குமார் என் லட்சியத்தைப் புரிந்து கொண்டு பக்கபலமாக இருந்து டிஎன்பிசி தேர்வு எழுத வைத்தார்.

என் 2வது குழந்தைக்கு ஒரு வயது இருக்கும் போது நான் தேர்வு எழுத ஆரம்பித்தேன். 4  முறை வெற்றிக்கு அருகே வரை  வந்து தோல்வியடைந்தேன். ஆனால் விடாமுயற்சி மட்டும் கைவிடாமல் தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் வெளியான குரூப் 2 தேர்வு முடிவுகளில் நான் தேர்ச்சி பெற்றேன். நேர்முக தேர்வில் எனக்கு எஸ்பிசஇஐடி பிரிவில் பதவி கிடைத்தது.

Also Read: பைக், டிவி, ஃப்ரிட்ஜ்.. அரசு பேருந்தில் பயணித்தால் பம்பர் பரிசு அறிவிப்பு! 

அப்பா இல்லாதது தான் குறை

அதே சமயம் இட ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் கல்வி  பயின்று முதலிடம் பிடித்ததால் நகராட்சியில் பதவி பெறுவதற்கும் தகுதி எனக்கு அமைந்தது. அதனால் அப்பா வேலை செய்த நகராட்சி துறையில் ஆணையர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்ததால் அதனை தேர்ந்தெடுத்தேன்.

என் அப்பா நகராட்சியில் தூய்மை பணியாளர். நான் அதே துறையில் ஆணையர். இதை அறிந்த எல்லோரும் என்னை பாராட்டினார்கள்.  ஆனால் இவற்றையெல்லாம் பார்க்க என்னுடைய அப்பா சேகர் தற்போது உயிருடன் இல்லை. அவர் மட்டும் இப்போது இருந்தால் நிச்சயம் என்னை தூக்கிக்கொண்டு கண்டிப்பாக ஊர்வலம் என்று இருப்பார். தாத்தா, அப்பா என்ற தலைமுறை தலைமுறையாக தூய்மை பணியாளர்களாக தான் இருந்தனர்.

ஆனால் அதில் என்னை ஈடுபடுத்தாமல் படித்து ஆளாக்கி அரசு வேலைக்கு போக வைக்க வேண்டும் என்ற அப்பாவின் ஆசை நிறைவேற்றிவிட்டேன். இதனிடையே துர்கா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார் துர்கா திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்தும் பெற்றார். சொந்த மாவட்டத்திலேயே அப்பா தூய்மை பணியாளராக வேலை பார்த்த   நகராட்சி துறையில் மகள் ஆணையராக பதவியேற்றுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Latest News