5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாயமான தூத்துக்குடி மீனவர்.. கண்டுபிடிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நேரில் கோரிக்கை!

கடந்த நவம்பர் 22 ஆம் தேதி மீன் பிடிப்பதற்கு வலை வீசும்போது எதிர்பாராதவிதமாக அண்ணாதுரை தவறி கடலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவருடன் சக படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அண்ணாதுரையை தேடியுள்ளனர்.

மாயமான தூத்துக்குடி மீனவர்.. கண்டுபிடிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நேரில் கோரிக்கை!
ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 Nov 2024 16:33 PM

தூத்துக்குடியில் காணாமல் போன மீனவரை கண்டுபிடுத்து தருமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கிடம், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி நேரில் கடிதம் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கடலோர காவல்படை அதிகாரிகளால் லட்சத்தீவுகள் அருகில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும்.  குஜராத், போர்பந்தர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி கண்டுபிடித்து தர வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் சந்தித்து கடிதம் வழங்கிக் கேட்டுகொண்டேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Mamallapuram Accident: மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.. கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

காணாமல் போன மீனவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் தனசேகர்.  இவர் அப்பகுதியில் உள்ள பனையடிப்பட்டி கிராமத்தில் மனைவி கல்யாண சுந்தரியுடன் வசித்து வருகிறார். . இவர்களது 2வது மகனான அண்ணாதுரை தனியார் மீன்பிடி நிறுவனத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். 29 வயதான இவர் கடந்த வாரம் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலம் விசைப்படகில் கொச்சியிலிருந்து குஜராத் போர்பந்தர் கடல் பகுதியில் தங்கி மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 22 ஆம் தேதி மீன் பிடிப்பதற்கு வலை வீசும்போது எதிர்பாராதவிதமாக அண்ணாதுரை தவறி கடலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவருடன் சக படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அண்ணாதுரையை தேடியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாதுரை குடும்பத்துக்கு அவர் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணாதுரையின் குடும்பமே கதறி அழுதனர். அவர் சார்ந்த கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கியது. மேலும் அண்ணாதுரையின் பெற்றோர் விரைந்து சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்தை சந்தித்தனர். அவரிடம் கடலில் தவறி விழுந்த அண்ணாதுரையை கண்டுபிடித்து தரும்படி வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது வரையில் கடலில் விழுந்த அண்ணாதுரையை தேடி வருவதாக குஜராத் அதிகாரிகள் கூறியதாக மீன் பிடிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் கடலில் தவறி விழுந்த அண்ணாதுரை நிலை என்ன ஆனது என்று தெரியாமல் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர். விரைவில், அவரை கண்டுபிடித்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணாதுரைக்கு திருமணமாகி சந்தன செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளார் உள்ள நிலையில் அவர் மாயமான சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Also Read: நடிகை நயன்தாரா மீது தனுஷ் உரிமையியல் வழக்கு.. பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

இப்படியான நிலையில் இந்த சம்பவம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இன்று ராஜ்நாத் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அமைச்சரும் உடனடியாக அதிகாரிகளை தொடர்புக் கொண்டு தகவல்களை கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. மீனவர் அண்ணாதுரையை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் 10 பேர் கைது 

இதனிடையே லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே கடந்த நவம்பர் 24ஆம் தேதி அனுமதியின்றி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மற்றும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இந்தப் பகுதியில் குறிப்பிட்ட பகுதி வரை மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர் சட்டவிரோதமாக மீனவர்கள் மீன்பிடிப்பதை கண்டறிந்தனர். சம்பந்தப்பட்ட விசைப்படகானது  தருவைக்குளத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமானது.

மேலும் மீன் பிடித்ததாக சாயல்குடியை சேர்ந்த முத்துப்பாண்டி, ராஜசேகர், தருவைகுலத்தை சேர்ந்த சரவணன், மைக்கேல், அந்தோணி, வேம்பார் பகுதியை சேர்ந்த அசோக், மில்டன், காளி, கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்த விஜயன், தாளமுத்து நகர் பகுதி சேர்ந்த பிரபு ஆகிய 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News