Mamallapuram Accident: மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.. கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் உள்ள நிலையில் முக்கியமான வழித்தடம் என்பதால் சாலை வசதிகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது வழக்கமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

Mamallapuram Accident: மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.. கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

விபத்தை ஏற்படுத்திய கார்

Updated On: 

27 Nov 2024 20:53 PM

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சாலையின் ஓரமாக அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அனைவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வந்தாலும் இன்னமும் சென்னையின் பிரபலமான சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்திற்கு தினம்தோறும் உள்ளூர் முதல் வெளிநாட்டு பயணிகள் வரை வருகை தருவது வழக்கம். இதனால் அப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் உள்ள நிலையில் முக்கியமான வழித்தடம் என்பதால் சாலை வசதிகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

Also Read: UP Accident: உத்திர பிரதேசத்தில் லாரி மீது கார் மோதி விபத்து.. 5 மருத்துவர்கள் உயிரிழப்பு..

இப்படியான நிலையில் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் இன்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். பண்டித மேடு பகுதியில் ஏராளமான செடி, மரங்கள் நிறைந்த கழுவேலி இடங்கள் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேய்ச்சலுக்காக தங்களது கால்நடைகளை இந்த இடத்திற்கு அழைத்து செல்வது வழக்கம்.

ஆடுகள் ஒரு பக்கம் மேய்ந்துக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் அனைவரும் சாலையின் ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களில் 5 பெண்கள் மீது ஏறி இறங்கியது.

கார் ஏறியதில் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. உயிரிழந்த  5  பெண்களும் யோகாம்பாள், விஜயா, ஆனந்தம்பாள், யசோதா, கௌரி என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையில் கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீப் போல பரவியது.

Also Read: Tirupathur: மாணவர் புத்தகத்தில் சாதிப்பெயர் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்!

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர் மக்கள் என அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்து அனைவரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். மேலும் கோபத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை சரமாரியாக கையில் கிடைத்த பொருட்களை கொண்டு அடி வெளுத்தனர்.  அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களின் இந்த தாக்குதலில் அந்த இளைஞர் காயமடைந்தார். இதற்கிடையில்  இந்த சம்பவ இடத்திற்கு தகவலறிந்து உடனடியாக வந்த மாமல்லபுரம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடன் காரில் பயணித்த 2 பேரையும் போலீசார் பிடித்தனர். இந்த சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த நபர் குடிபோதையில் இருந்தாரா? அல்லது சாலையில் மற்றொரு வாகனத்தை முந்தி செல்லும்போது ஓரத்தில் இவர்கள் அமர்ந்திருந்தது தெரியாமல் விபத்து நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், இதனால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாமல்லபுரம் அருகே கார் மோதி உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். 5 பேர் உயிரிழந்தது தொடர்பான செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.
நடிகை சோபிதா துலிபாலாவின் சினிமா பயணம்..!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...