5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Karur: காணாமல் போன அர்ச்சகரின் மனைவி.. பத்திரமாக மீட்டு கொடுத்த இஸ்லாமிய தம்பதி!

Coimbatore: கடந்த 20 ஆம் தேதி கோமதி மீனாட்சி மாவு அரைத்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கல்யாணராமன் கோவை மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் கோமதி மீனாட்சியை தேடி அலைந்துள்ளார். ஆனாலும் கிடைக்கவில்லை.

Karur: காணாமல் போன அர்ச்சகரின் மனைவி.. பத்திரமாக மீட்டு கொடுத்த இஸ்லாமிய தம்பதி!
கோமதி மீனாட்சி – கலீர் ரகுமான்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 24 Nov 2024 07:40 AM

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன கோவில் அர்ச்சகரின் மனைவி கரூரில் மீட்கப்பட்ட சம்பவத்தில் நெகிழ வைக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அப்பெண்ணை இஸ்லாமிய தம்பதி மீட்டு பாதுகாத்து வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம்.கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன். 55 வயதான இவர் அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.கல்யாண ராமன் தனது மனைவி கோமதி மீனாட்சி மற்றும் வேம்பு வினோதினி ஆகியோருடன் சரவணம்பட்டியில் வசித்து வருகிறார்.

காணாமல் போன கோமதி மீனாட்சி

இப்படியான நிலையில் கடந்த 20 ஆம் தேதி கோமதி மீனாட்சி மாவு அரைத்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கல்யாணராமன் கோவை மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் கோமதி மீனாட்சியை தேடி அலைந்துள்ளார்.

எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் கல்யாண ராமன் மற்றும் மகள் வேம்பு வினோதினி ஆகியோர் மிகுந்த சோகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் உதவியை நாட முடிவு செய்தனர்.அதன்படி, கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தனது மனைவி கோமதி மீனாட்சி காணாமல் போனது குறித்து கல்யாண ராமன் புகார் மனு அளித்துள்ளார்.

Also Read: Maharastra: தேர்தல் வெற்றி.. கொண்டாட சென்ற மகாராஷ்ட்ரா தேர்தல் வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்!

அதோடுமட்டுமல்லாமல் தனது மனைவியின் புகைப்படத்துடன் காணாமல் போனது குறித்த விவரங்களை பற்றியும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனிடையே கோவையில் காணாமல் போன கோமதி மீனாட்சி கரூரில் மீட்கப்பட்டுள்ளார். அம்மாவட்டத்தில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் ஒரு பெண் அங்குமிங்கும் சாலையில் எதையோ யோசித்தபடி நடந்து சென்றுள்ளார். அதனை கலீல் ரகுமான் – பாத்திமா தம்பதியினர் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர்.

உதவிக்கரம் நீட்டிய இஸ்லாமிய தம்பதியினர்

நீலிமேடு பகுதியை சேர்ந்த இந்த தம்பதியினர் சர்ச் கார்னர் பகுதியில் சாலை ஓரத்தில் செருப்பு கடை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கோமதி மீனாட்சியை அழைத்து விசாரித்து என்ன வேண்டும் என முதலில் கேட்டுள்ளனர். தனக்கு எதுவும் தெரியவில்லை என அவர் பதிலளித்துள்ளார். சரி இங்கேயே இருங்கள் என கலீல் ரகுமான் சொன்னதும் பசிப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக சாப்பாடு வாங்கி கொடுத்ததும் அங்கிருந்து சென்றுள்ளார்.

மீண்டும் மாலையில் அதே இடத்துக்கு கோமதி மீனாட்சி வந்துள்ளார். அப்போது கலீல் ரகுமான் – பாத்திமா தம்பதியினர் பேச்சு கொடுத்துள்ளனர். தனக்கு எங்கு போக வேண்டும் என தெரியவில்லை. தான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் கோமதி கூறியுள்ளார். மேலும் கோவையில் இருந்து கரூர் வந்தது குறித்து முன்னுக்கு பின் முரணாக தெரிவித்த நிலையில் கணவர் கல்யாண ராமனின் போன் நம்பரை தெரிவித்துள்ளார்.

உடனடியாக கலீல் ரகுமான் அந்த எண்ணில் தொடர்புக் கொண்டு கல்யாண ராமனிடம் கோமதி மீனாட்சி பற்றிய விபரத்தை தெரிவித்துள்ளார். மேலும் கரூரில் செருப்பு கடை ஒன்றில் பத்திரமாக இருப்பதாக கோமதி மீனாட்சி தெரிவித்ததையடுத்து கல்யாண ராமன் அவருடன் வீடியோ கால் மூலமாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து கோவையில் இருந்து தனது நண்பர் உதவியுடன் கார் மூலமாக கல்யாண ராமன் கரூர் வந்தார்.

Also Read:Traffic Diversion: மெட்ரோ பணிகள்.. சென்னை தி.நகரில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!

குவியும் பாராட்டு

அங்கு வந்த அவர் காணாமல் போன மனைவி கோமதி மீனாட்சியை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கட்டித்தழுவி உற்சாகமானார். தன்னலம் பாராது உதவி புரிந்த இஸ்லாமிய தம்பதிகளுக்கு மனமுருகி நன்றி தெரிவித்ததுடன், மீண்டும் மனைவியை அழைத்துக்கொண்டு கோவை சென்றார். கோமதி மீனாட்சி நினைவுத்திறன் பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் தான் மாவு அரைக்கப் போனவர் காணமல் போய் தான் யாரென்று தெரியாமல் இரண்டு நாட்கள் கரூரில் சுற்றித் திரிந்துள்ளதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோவையில் காணாமல் போன கோவில் அர்ச்சகரின் மனைவி கரூரில் மீட்கப்பட்டதும், அதற்கு இஸ்லாமிய தம்பதியர்கள் பெரிதும் உதவியாக இருந்த நிகழ்வு இந்து – முஸ்லிம் ஒற்றுமையை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது. கலீல் ரகுமான் – பாத்திமா தம்பதியினர் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Latest News