Shaktikanta Das: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நெஞ்செரிச்சல் காரணமாக அவதிப்பட்டதால் சக்தி காந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சக்திகாந்த தாஸ் உடல் நலம் பற்றி கவலைப்படும் அளவுக்கு இல்லை எனவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி உர்ஜித் படேலுக்குப் பிறகு நியமிக்கப்பட்டவர் சக்தி காந்ததாஸ். ஒடிசாவில் பிறந்த சக்தி காந்த தாஸ், டெல்லி பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்று துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முடித்தார். இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
1980 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். சக்தி காந்த தாஸ் தமிழ்நாடு கேடரில் பணியாற்றினார். தமிழ்நாடு மாநில அரசின் வணிகவரி ஆணையர், தொழில்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பின்னர் மத்திய அரசு சென்று சென்று நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். இதற்கிடையில் 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியான (ஜிஎஸ்டி) போன்ற முக்கிய சீர்திருத்தங்களை பொருளாதார துறையில் அறிமுகப்படுத்துவதில் சக்தி காந்த தாஸ் முக்கிய பங்கு வகித்தார்.
அவர் மே 2017 ஆம் ஆண்டு பொருளாதார விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியின் மூலம் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு அவர் பொறுப்பேற்றார். திவால் குறியீடு மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.