Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் பலி.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு உடலாக வெளியே கொண்டு வரும்போதும் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் கண்கலங்கினர். இரவு 9 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வஉசி நகருக்கு வந்து பணிகளை பார்வையிட்டார்.
திருவண்ணாமலை மண் சரிவு: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் திடீரென சில பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறமுள்ள தீப மலை அடிவாரத்தில் உள்ள வஉசி நகரில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டது.
உருண்டு வந்த பாறை.. புதைந்த வீடு
நேற்று முன்தினம் இரவு திடீரென பாறைகள் உருண்டு அடிவாரத்தில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. இதனைத் தொடர்ந்து மண் சரிவும் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் இருந்த சில வீடுகள் மழைநீருடன் மண்ணுக்குள் மூழ்கியது. இந்த வீட்டினுள் 7 பேர் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்த மக்கள் காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மீட்பு படையினர் என அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த வீட்டில் கணவன், மனைவி அவர்களின் 2 குழந்தைகள் வசித்து வந்துள்ளனர்.
சம்பவம் நடந்த தினத்தன்று கணவரின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என 7 பேர் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்ததால் இரவில் மீட்பு பணி நடைபெறுவது தாமதமாகி கொண்டிருந்தது. இதனையடுத்து நேற்று காலை மழை விட்ட நிலையில் உடனடியாக மீட்பு படைவீரர்கள் அதிதீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
Also Read: School Leave: கனமழை, வெள்ளம்.. இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?
மீட்கப்பட்ட உடல்கள்
மண்ணை அகற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டின் மீது இருந்த மண் அனைத்தும் சிறிது சிறிதாக அகற்றப்பட்ட நிலையில் ஒவ்வொருவரின் உடலும் மீட்கப்பட்டது. வீட்டின் முன்பக்க வாசல் பகுதியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 4 பேரின் உடல்களும் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்டது. பாறைகள் விழுந்தது மற்றும் மண் மூடியதில் 7 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகள் இனியா, மகன் கௌதம், மற்றும் மகா, வினோதினி, ரம்யா ஆகிய 7 பேரும் உயிரிழந்த நிலையில் அவர்களின் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிரசெய்த இந்த சம்பவத்தில் சிக்கிய அனைவரும் உயிருடன் வர வேண்டும் என்பதே மக்களின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனால் ஒருவரை கூட காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது துயரத்தை உண்டாக்கியது.
Also Read: Cyclone Fengal: வெள்ள பாதிப்பு! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு உடலாக வெளியே கொண்டு வரும்போதும் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் கண்கலங்கினர். இரவு 9 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வஉசி நகருக்கு வந்து மண் சரிவால் மூடப்பட்ட இடத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எப்படியாவது அனைவரும் மீட்கப்பட்டு விடுவார்கள் என நல்ல செய்தி வரும் என்று நினைத்தோம். ஆனால் இப்படி நடந்திருக்கக் கூடாது. இது ஒரு துயரமான சம்பவம்” என உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் வஉசி நகர் மக்கள் தங்களது இடங்களை விட்டு வெளியே வர தயார் என்றால் அவர்களுக்கு அரசு மாற்று இடம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். மண் சரிவு தொடர்பாக ஐஐடி குழு மண் பரிசோதனை செய்து அறிக்கை தர அறிவுறுத்தியுள்ளதாகவும் உதயநிதி தெரிவித்தார். அதேசமயம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவி இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.