School Leave: கனமழை, வெள்ளம்.. இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?
கனமழை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஒரு பக்கம் பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உருவான ஃபெஞ்சால் புயல் வட தமிழக மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி டிசம்பர் 30 ஆம் தேதி கரையை கடந்தாலும் மழை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியான […]
கனமழை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஒரு பக்கம் பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உருவான ஃபெஞ்சால் புயல் வட தமிழக மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி டிசம்பர் 30 ஆம் தேதி கரையை கடந்தாலும் மழை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியான நிலையில் கனமழை காரணமாக சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 3) விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் விழுப்புரம் மாவட்டத்திலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய 2 தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நடக்கவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சில பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் மீட்பு பணிகள் விரைவாக முடிவுப் பெற்று கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் இன்று நடக்கவிருந்த நியாயவிலை கடை பணியாளர் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்ட மக்கள் தங்களது மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை செலுத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டு கால நீட்டிப்பு செய்துள்ளது. இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள பொதுமக்களிடம் நிலைமையை கேட்டிருந்த அவர் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அதே சமயம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
Also Read: Cyclone Fengal: வெள்ள பாதிப்பு! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் பல மணி நேரம் காத்திருந்து நிலையில் திருக்கோவிலூர் வழியாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டது. பின்னர் வெள்ளம் குறைந்த நிலையில் ஒருவழிப்பாதையாகவும், அதனைத் தொடர்ந்து 8 மணி நேரத்துக்குப் பின் முழுமையாக போக்குவரத்து சேவை சீரானது. விக்கிரவாண்டி சாலையில் உள்ள மக்கள் தங்களுக்கு உணவு தேவை என நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதேசமயம் பகல் நேரத்தில் இயக்கப்பட்ட பெரும்பாலான ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், பல்லவன், சோழன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
சில ரயில்கள் விழுப்புரத்திலிருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு வரும்படி மற்றும் பாதை அமைக்கப்பட்டது. மாலை நேரத்தில் வெள்ளத்தின் அளவு குறைந்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திலிருந்து இரண்டு மணி அல்லது மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. நடுவழியில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்து பயணிகளை அழைத்து வரும் பொருட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது.