Sabarimala: சபரிமலையில் வெள்ளம்.. பக்தர்கள் பம்பை ஆற்றில் இறங்க தடை..
Kerala Rain: கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, வயநாடு, பத்தினம் திட்டா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் இறங்குவதற்கு பத்தினம் திட்டா மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல மாவட்டங்களில் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பத்திரம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாகும். இதன் காரணமாக கேரளா மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
Also Read: Sabarimala: ஐயப்பனுக்கு ஏன் நெய் தேங்காய் அடைக்கப்படுகிறது தெரியுமா?
அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பத்தினம் திட்டா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காட்டுப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பக்தர்கள் எக்காரணம் கொண்டும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று இரவு முதல் பக்தர்கள் யாரும் பம்பை ஆற்றில் இறங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரு வழி பயணம் மேற்கொண்டு வருவோர் இரவு நேரங்களில் காட்டு வழியாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் பெருவழி பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, வயநாடு, பத்தினம் திட்டா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக நேற்று முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முன்பதிவு செய்தும், செய்யாமலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ரெயின் கோட், குடை போன்ற பொருள்களை எடுத்து வருமாறு தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மழையை எதிர்கொள்ளவும், சித்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பத்தினம் திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் குறைந்தது 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கனமழையும் பெய்து வருவதால் அங்கு சென்றுள்ள பக்தர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்