Sabarimala: இனி சபரிமலையில் கவலையே இல்ல.. வந்தாச்சு தனி வழி!
Kerala: ல் சபரிமலையை பொறுத்தவரை கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்வுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பாண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது.
சபரிமலை: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மண்டல பூஜை தொடங்கி இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தனிப்பாதை மூலம் சிரமம் இல்லாமலும் விரைவாகவும் சாமி தரிசனம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு தொடர்ச்சியாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதையானது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் நடை திறக்கப்பட்டு ஐந்து நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் சபரிமலையை பொறுத்தவரை கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்வுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பாண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது.
அன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மதியம் 1 மணியில் இருந்து பக்தர்கள் கூட்டம் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி படையெடுக்க தொடங்கினர். மேலும் நவம்பர் 16 முதல் டிசம்பர் 26 வரை மண்டல பூஜைக்காக நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 4 நாட்கள் நடை அடைக்கப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை திருவாங்கூர் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
Also Read: Sabarimala: சபரிமலைக்கு முன் பக்தர்கள் செல்ல வேண்டிய சாஸ்தா கோயில்!
சபரிமலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
இதற்கிடையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சாமி தரிசனம் செய்ய நினைக்கும் பக்தர்கள் தங்களுடைய ஆதார் மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களுக்கு புகைப்படம் அடங்கிய ஒப்புகை சீட்டு வழங்கப்படும். எந்த நாளில் எந்த நேரத்தில் நாம் தரிசனம் செய்ய போகிறோம் என்பதை நாம் இதில் தேர்வு செய்யலாம். அதே சமயம் ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு ஏதுவாக எருமேலி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்ல பொதுவாக பக்தர்கள் 3 பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒன்று எருமேலி வந்து அங்கிருந்து 48 மைல்கள் நடந்து பெருவழிப்பாதை வழியாக பம்பை அடைகின்றனர். பெரும்பாலானோர் பம்பையில் இருந்து சன்னிதானம் வழியாக செல்லும் சிறுவழிப்பாதையில் செல்கின்றனர். சில பக்தர்கள் புல்மேடு பாதை வழியாகவும் சபரிமலைக்குள் வருகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை 1 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Also Read: sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் இதுவரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18 படிகள் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்வதாக தகவல் தெரிவிக்கின்றன. பக்தர்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் சுழற்சி முறையில் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், 18 படி ஏறியதும் சுற்றுப்பாதையில் செல்லாமல் நேரடியாக ஐயப்பனை தரிசிக்க முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இந்த தனிப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் கூடுதலாக ஒருவர் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் நிலையில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் ஏற்படாத வகையில் தரிசனம் செய்து முடித்தவுடன் பக்தர்கள் உடனடியாக கீழே இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.