SA vs AFG: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா..!
டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நடப்பு டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிவுற்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை செய்தன. மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டி20 உலக கோப்பை தொடரில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதில் குர்பாஸ், நபி மற்றும் நூர் அகமது ரன்கள் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்தார்.
Also Read: Watch Video: திருமணம் செய்ய மணப்பெண்ணை தேடி தாருங்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன் மற்றும் ஷம்சி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடி பெற்ற ரன்களை காட்டிலும், எக்ஸ்ட்ராஸ் மூலமாக பெற்ற ரன்களே அதிகமாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த வெற்றி இலக்கான 57 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிகாக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணைந்து விளையாடினர். ஃபரூக் ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்த போது டிகாக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றிக்ஸ் ஜோடி வெற்றி இலக்கை அடைந்தனர்.
Also Read: School Leave: தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்தது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.