Cuddalore: தென்பெண்ணை வெள்ளத்தில் மிதந்த கிராமங்கள்.. தண்ணீர் தேசமாக மாறிய கடலூர்!

தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் 150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியாக உள்ள அரசூர் பகுதியில் வெள்ளநீர் பாய்ந்ததால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

Cuddalore: தென்பெண்ணை வெள்ளத்தில் மிதந்த கிராமங்கள்.. தண்ணீர் தேசமாக மாறிய கடலூர்!

வெள்ளம் சூழ்ந்த கடலூர்

Published: 

03 Dec 2024 11:06 AM

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஃபெஞ்சல் புயலாக உருமாற்றம் அடைந்தது. இந்த புயலால் வட தமிழக மாவட்டங்கள் அடியோடு புரட்டி போடப்பட்டுள்ளது.

ஆற்று வெள்ளத்தால் சூழப்பட்ட கடலூர்

ஃபெஞ்சால் புயல் மிக மெதுவாக நகர்ந்து கரையைக் கடந்த நிலையில், நிலைகொண்ட இடங்களில் எல்லாம் மேகக் கூட்டங்கள் கூடியது.  இதனால் எங்கெல்லாம் புயல் நகர்ந்து நிற்கிறதோ அந்த ஊரில் எல்லாம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகள், குளங்கள் ஏரிகள் என பிரதான நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இப்படியான நிலையில் ஃபெஞ்சால்  புயல் புதுச்சேரிக்கும் மரக்காணத்திற்கும் இடையே கரையை டிசம்பர் 30ஆம் தேதி கடந்த நிலையில் வலுவிழக்காமல் இருந்ததால் தொடர்ச்சியாக வடமாவட்டங்களில் மழை பெய்தது.

குறிப்பாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலங்களிலும் கன மழை பெய்தது. இதேபோல் திருவண்ணாமலையில் கனமழை பெய்ததால் அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடானது. அதுமட்டுமல்லாமல் அம்மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தகவல் கடைமடை வரை கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு சென்று சேருவதற்குள் விழுப்புரம், கடலூரை வெள்ள நீர் சூழ்ந்தது.  முதலில் சுமார் 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 2.40 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.  இது தற்போது 36 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.  வெள்ளப்பெருக்கால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. மேலும் வெள்ள நீர் கடலூர் மாநகரப் பகுதிக்குள் புகுந்தது. குறிஞ்சி நகர், நடேசன் நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகர்புற பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பதறிப்போயினர். அதுமட்டுமல்லாமல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

Also Read: Rain Alert: டிசம்பரில் மழையால் ஆபத்து? – வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து துண்டிப்பு

திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 20 இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் 150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியாக உள்ள அரசூர் பகுதியில் வெள்ளநீர் பாய்ந்ததால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

மேலும் விக்கிரவாண்டியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூர் வழியாக செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் தென்பெண்ணையாறு கடலில் கலக்கும் இடமான கடலூரில் வெள்ளப் பாதிப்பு பயங்கரமாக இருந்தது. பல்வேறு  கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் அங்கு இருந்த மக்கள் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டனர். ஊர் எது,  ஆறு எது என தெரியாத அளவுக்கு கடலூர் முழுக்க இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் புகுந்த  தண்ணீர்

தென்பெண்ணை ஆற்றில் 52 வருடங்களுக்குப் பிறகு 2 லட்சம் கன அடிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தங்கள் உடமைகளை இழந்ததாக கடலூர் மாவட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அரசு அதிகாரிகள்  சாத்தனூர் அணையை எப்போது திறக்கலாம் என முடிவெடுத்தார்கள்? முறையாக எச்சரிக்கை விட்டார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனால் பலரும் நள்ளிரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் தான் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி மேடான இடத்திற்கு வந்துள்ளனர். தண்ணீர் வேகமாக வீடுகளுக்குள் செல்ல தொடங்கிய நிலையில் மக்கள் விரைவாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தென்பெண்ணை ஆறு கடலில் கலக்கும் இடம் கடலூர் என்பது அந்த இடமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Also Read: Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் பலி.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

அதற்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் அருகில் இருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட மூங்கில்துரைப்பட்டு, மணலூர்பேட்டை, திருக்கோவலூர், குச்சிபாளையம், மேல்குமாரமங்கலம், புலவனூர், கந்தரகோட்டை ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் என 5 மாவட்டங்களை கடந்து தான் சாத்தனூர் அணை நீர் தென்பெண்ணை ஆற்றில் கடலில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?