Rain Alert: டிசம்பரில் மழையால் ஆபத்து? – வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காரைக்கால், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் டிசம்பர் மாதம் இயல்பை விட மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1 ஆம் ஃஅதேதி தொடங்கி நிலையில் அது தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காரைக்கால், புதுச்சேரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சிக்கிய வட மாவட்டங்கள்
கடந்தாண்டு தென் மாவட்டங்களை புயல் புரட்டி போட்ட நிலையில் இந்த ஆண்டு வடமாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. தமிழக அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் இயற்கையின் முடிவுகளை நம்மால் கணிக்க முடியாது என்பதால் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது. விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பருவ தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Also Read: Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் பலி.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
மேலும் சாலைகளில் வெள்ளநீர் ஓடுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ரயில்களும் நிலைமையை பொருத்து மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மறுநாள் மாறி அதன் தொடர்ச்சியாக ஃபெஞ்சால் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் நாகப்பட்டினம் – இலங்கை அருகே கரையை கடக்கும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் இயற்கை மாற்றம் காரணமாக பின்னர் சென்னை அருகே புதுச்சேரிக்கும், மரக்காணத்திற்கும் இடையில் கரையை கடந்தது. இந்தப் புயல் காரணமாக நவம்பர் 29 மற்றும் நவம்பர் 30 ஆகிய இரு நாட்கள் வட மாவட்டங்கள் முழுக்க பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியது வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்து விட்டது. திருவண்ணாமலை தீபமலையில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பீதியடைந்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் தந்த அப்டேட்
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட தென் மாநிலங்களில் நவம்பர் மாதத்தை விட டிசம்பர் மாதத்தில் அதிகமாக மழை பெய்யும் என கூறப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், டிசம்பர் மாதத்தில் 100 சதவீதம் என்பது இயல்பு என்றால் 131% மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் டிசம்பரில் பெய்யும் மழையின் பட்டியலில் தமிழ்நாடு, புதுச்சேரி,ஆந்திர பிரதேசம், தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1971 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கில் இருந்து இந்த சராசரி மழை அளவானது கணக்கிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே உடைமைகளை இழந்து தவித்து வரும் அவர்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என புலம்பி தவித்து வருகின்றனர்.
Also Read: Crime: இன்ஸ்டாகிராம் மூலம் தங்கையுடன் காதல்.. இளைஞரை கொலை செய்த சகோதரர்!
இன்றைய வானிலை அப்டேட்
இந்நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர்,திண்டுக்கல், திருப்பூர், மதுரை, தேனி, திருச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் பகுதிகள் கேரளா கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 33 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே எக்காரணம் கொண்டும் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது