Crime: இன்ஸ்டாகிராம் மூலம் தங்கையுடன் காதல்.. இளைஞரை கொலை செய்த சகோதரர்!
Tirunelveli Murder: பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் உள்ள 24வது தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு ஜெனிபர் சரோஜாவின் சகோதரரை சந்திக்க அவர் சென்றுள்ளார். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு தங்கையுடனான காதலை கைவிடுமாறு புஷ்பராஜ் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காதலியை பார்க்க வந்த நபரை, அப்பெண்ணின் அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டத்தையே அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக காதலித்து திருமணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்ற 25 வயது இளைஞர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா கீழ தெருவை சேர்ந்த ஜெனிபர் சரோஜா என்ற 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
Also Read: பெண் போலீஸ் ஆணவக் கொலை.. நடந்தது என்ன? பகீர் சம்பவம்!
இன்ஸ்டாகிராமில் காதல்
இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இவர்களின் காதலுக்கு ஜெனிபர் சரோஜா வீட்டில் எதிர்ப்பு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன் அவர் தன் காதலன் விஜய்யுடன் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். நேராக விஜய் வீட்டுக்கு சென்று நிலையில் ஏற்கனவே அவரின் வீட்டில் விஜய்யின் சகோதரி கணவருடன் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதைக் கண்டுள்ளார்.
அந்தப் பெண் ஜெனிபர் சரோஜாவுக்கு அறிவுரை கூறி திருநெல்வேலிக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்தவுடன் இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணத்தை செய்து வைப்பதாக விஜய்யின் சகோதரி உறுதியளித்துள்ளார். இதனிடையே வீடு திரும்பிய ஜெனிஃபர் சரோஜா ஒரு பக்கம் தன் குடும்பத்தினர் எதிர்ப்பு மறுபக்கம் காதலன் விஜய்யுடன் சேர்ந்து வாழ முடியாத நிலை என விரக்தியில் இருந்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற பெண்
கடந்த நவம்பர் 28ஆம் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜெனிபர் சரோஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஜெனிபர் சரோஜா இந்த நிலைமைக்கு காரணமாக இருந்த விஜய் மீது அவரது குடும்பத்தினர் கோபம் திரும்பியுள்ளது. குறிப்பாக அவரது சகோதரர் புஷ்பராஜ் சிம்சன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இப்படியான நிலையில் திருநெல்வேலிக்கு வருமாறு விஜய்க்கு புஷ்பராஜ் ஜின்சனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. திருமண பேச்சுவார்த்தைக்கு தான் அழைப்பதாக நம்பி நேற்று காலை ரயில் மூலம் திருநெல்வேலிக்கு விஜய் வந்துள்ளார்.
Also Read: Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் பலி.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
கைகலப்பாக மாறிய பேச்சுவார்த்தை
பின்னர் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் உள்ள 24வது தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு ஜெனிபர் சரோஜாவின் சகோதரரை சந்திக்க அவர் சென்றுள்ளார். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு தங்கையுடனான காதலை கைவிடுமாறு புஷ்பராஜ் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் மறுக்கவே பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் சிம்சன் அங்கிருந்த பழைய கட்டட பொருட்களைக் கொண்டு விஜய் சரமாரியாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளார். இதனிடையே விஜய்யின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் புஷ்பராஜ் ஜிம்சன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தடய அறிவியல் ஆய்வக உதவ இயக்குநர் ஆனந்தி தலைமையிலான குழுவினர் வந்து அந்த வீட்டை முழுவதுமாக சோதனை செய்தனர். இன்ஸ்டாகிராம் காதலால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் விஜய் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற அவர்கள் திருநெல்வேலி வந்ததும் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.