Pudukottai: வீட்டில் வைத்து பிரசவம்.. அலட்சியத்தால் பறிபோன குழந்தை உயிர்!

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அபிராமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே ராஜசேகரும், அவரது அம்மாவும் சேர்ந்து youtube பார்த்து பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவம் வெற்றிகரமாக நடந்த நிலையில் வெளியே வந்த குழந்தை அடுத்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தது.

Pudukottai: வீட்டில் வைத்து பிரசவம்.. அலட்சியத்தால் பறிபோன குழந்தை உயிர்!

கோப்பு புகைப்படம்

Published: 

12 Dec 2024 16:44 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள பெரிய செங்கீரை என்ற பகுதியில் ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மனைவியான அபிராமி இரண்டாவது முறையாக கருத்தரித்திருந்தார். ஏற்கனவே இவர்களுக்கு முதல் பிரசவத்தின் போது குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதனால் அலோபதி மருத்துவம் மீது ராஜசேகரின் குடும்பம் நம்பிக்கை இழந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அபிராமி இரண்டாவது முறையாக கருத்தரித்த நிலையில் அவருக்கு இந்த முறை இயற்கையான முறையில் பிரசவம் பார்க்க ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக யூட்யூப் பார்த்து பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொண்டுள்ளனர்.

Also Read: Actress Sai Pallavi: “எல்லாம் கடவுளுக்கு தெரியும்” – போலியான தகவலுக்கு கொதித்தெழுந்த சாய் பல்லவி!

வீட்டில் வைத்து பிரசவம்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அபிராமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே ராஜசேகரும், அவரது அம்மாவும் சேர்ந்து youtube பார்த்து பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவம் வெற்றிகரமாக நடந்த நிலையில் வெளியே வந்த குழந்தை அடுத்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தது. அதேசமயம் அபிராமியின் உடல் நிலையும் மோசமான நிலைக்கு செல்ல பதறிப் போன ராஜசேகர் உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அவரிடம் நடந்து விவரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். வீட்டிலேயே பிரசவம் பார்த்தது, சுகாதாரத்துறைக்கு இரண்டாவது முறையாக கர்ப்பமானதை மறைத்தது போன்றவை தொடர்பாக சுகாதாரத்துறை சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Social Media: திடீரென செயல்படாமல் போன சமூக வலைத்தளங்கள்.. என்னதான் பிரச்னை?

ஆபத்தான செயல் வேண்டாம்

சமீபகாலமாக மருத்துவமனை, மருத்துவர்கள் உதவியின்றி வீட்டிலேயே இணைய வீடியோக்கள் மூலம் பிரசவம் பார்க்கும் நடைமுறையானது அதிகரித்து வருகிறது. இரு உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் குடும்பத்தினர் அலட்சியம் காட்டுவதால் உயிரிழப்பு வரை நேர்கிறது. முன்பெல்லாம் குழந்தைகள் வீட்டிலேயே பிறந்தாலும் மருத்துவம் தெரிந்தவர்கள் அருகில் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இப்போது அறுவை சிகிச்சை, மருத்துவமனை அலர்ஜி போன்ற காரணங்களால் முடிந்தவரை சுகப்பிரசவத்தை எதிர்பார்த்து அதற்கேற்ப கர்ப்பமான பெண்ணை தயார் செய்வது போன்ற ஆபத்தான செயல்கள் நிகழ்ந்து வருகிறது.

வீடுகளிலேயே நாம் பிரசவம் பார்க்கும் போது ஏற்படும் சிக்கலான நிலையை அவ்வளவு எளிதில் கையாண்டு விட முடியாது.  குறிப்பாக தாய்க்கு ரத்தப்போக்கு, நோய்த்தொற்று, குழந்தைகளுக்கு மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் பிரசவத்தின் போது ஏற்படலாம் என்பதால் அதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒருவேளை குழந்தை வெளியும் வரும் வரை எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும் நோய் தொற்று பிறந்த குழந்தைகளை எளிதில் தாக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே வீடுகளில் பிரசவம் பார்ப்பதை ஊக்குவிக்கக்கூடாது.

இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது. இப்படியான நிலையில் புதுக்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது

தொடரும் பிரச்னைகள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த குன்றத்தூரில் மனைவிக்கு வீட்டிலேயே கணவர் பிரசவ பார்த்தும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என்ன மனோகரன் குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில் இவரது மனைவி சுகன்யாவுக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. மனோகரன் தனது மனைவியை பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து பார்த்துள்ளார். அது மட்டுமல்லாமல் தான் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் வீட்டில் குழந்தை பெற்றோர்களின் அனுபவம் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு அமைத்து அதில் பல்வேறு தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் பிரசவம் பார்த்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் சுகாதாரத் துறையினர் அளித்த புகாரியின் அடிப்படையில் விசாரணை நடத்தி மனோகரனை எச்சரித்து அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு: Tamil Breaking News Live: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..இன்றைய செய்திகள் உடனுக்குடன்!

டிசம்பர் மாதத்தில் நாம் செல்ல வேண்டிய அழகிய சுற்றுலா இடங்கள்!
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ டிப்ஸ்!
ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!