Cyclone Fengal: ஃபெங்கால் புயல் உருவாக வாய்ப்பில்லை.. அடுத்து என்ன நடக்கும்?
வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலை 45-55 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஃபெங்கால் புயல்: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கால் புயலாக உருவாகும் என அறிவிக்கப்பட்ட் நிலையில், திடீரென அதற்கு வாய்ப்பு குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையான கடந்த 6 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 9 கிமீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று (நவம்பர் 28) இரவு 11.30 மணி நேர நிலவரப்படி அட்சரேகைக்கு 10.1°N அருகிலும் மற்றும் தீர்க்கரேகை 82.8°E என்ற அதே பகுதியில் மையம் கொண்டு காணப்படுகிறது.
இது திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 330 கி.மீ., தூரத்திலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 390 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 29ஆம் தேதி வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரத்தை தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலை 45-55 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் நகர்வு நிலை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஃபெங்கால் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
Also Read: Watch Video: நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள்.. அதிரடியில் இறங்கிய கடலோர காவல்படை.. திக் திக்!
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
இதனிடையே இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 30-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
Also Read: Jaundice: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வரலாம்! கண்டறிவது எப்படி?
வெதர்மேன் சொன்ன அப்டேட்
தமிழ்நாடு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் சிறிய மேகங்கள் கூடியதன் விளைவாக நேற்று இரவு 1-2 மணி நேரத்தில் 20-40 மிமீ மழை பெய்துள்ளது. எங்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு அருகில் மேக கூட்டத்தை பார்த்தால் புரியும். புதுச்சேரி மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. இந்த மழை மூலம் சில கட்டுக்கதைகள் உடைந்துள்ளது. குளிர் வந்தால் மழை பெய்யாது, – காற்றழுத்த தாழ்வு / சூறாவளி வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும்போது நிலப்பரப்பில் வெப்பநிலை எப்போதும் குறைவது வழக்கம் தான். பகலில் கூட குளிர்ச்சியாகத்தான் இருக்கும். இந்த அதிகமான குளிர் கடந்த 2 நாட்களில் பதிவாகியுள்ளது. ஆனால் சூறாவளி நம் திசையில் நகர ஆரம்பித்தவுடன் வெப்பம் மீண்டும் அதிகரிக்க தொடங்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சூறாவளியாக மாறுவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன, ஏனெனில் நாளை அறிகுறிகள் சில தீவிரமடையும் என காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் மழையின் எதிர்பார்ப்பில் எந்த மாற்றமும் இருக்காது. சென்னை முதல் விழுப்புரம் மரக்காணம் கடற்கரை வரையிலான பகுதிகளில் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை மிக மிக கனமழை பெய்யும். கனமழை தொடங்கும் நேரம் இன்று மாறுபடலாம்.
தாமதம் காரணமாக இது காலை அல்லது மதியம் அல்லது மாலை அல்லது இரவில் தொடங்கலாம். சூறாவளி போய்விட்டது என்றால் மழையும் போய்விட்டது என்று அர்த்தமல்ல.சூறாவளி என்று பெயரிட்டாலும், அது 35 முடிச்சுகள் கொண்ட விளிம்புநிலையாகத்தான் இருக்கும். 34 முடிச்சுகளின் ஆழமான தாழ்வு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. சூறாவளியை அறிவிக்கும் முன், அதற்கு பெயர் வைக்க வேண்டாம் என்பது இன்று நல்ல பாடமாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.