Crime: கொள்ளை பணத்தில் நூற்பாலை வாங்கி சொகுசு வாழ்க்கை.. குடும்பத்துடன் சிக்கிய கும்பல்!
Theni: திருட்டு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் எந்தவித சிசிடிவி கேமரா காட்சிகளும், கைரேகை எதுவும் சிக்காததால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை குற்றவாளியை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
திருட்டு சம்பவம்: தேனி அருகே கொள்ளையடித்த பணத்தில் நூற்பாலை வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்த கும்பலை போலீசார் கொத்தாக கைது செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 4 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி என்பது பற்றி காணலாம். தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டி அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்கள் இல்லாத 5 வீடுகளில் அடுத்தடுத்து பணம் மற்றும் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் நடப்பாண்டு 4 வீடுகளில் 88 சவரன் நகை மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
Also Read: Crime: வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவல்.. மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவன்!
காட்டி கொடுத்த பழைய வழக்கு
ஆனால் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் எந்தவித சிசிடிவி கேமரா காட்சிகளும், கைரேகை எதுவும் சிக்காததால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை குற்றவாளியை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்படியான நிலையில் தான் இதே பாணியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை மறுபக்கம் தயார் செய்தனர். அதனடிப்படையில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் பெரிய குளத்தைச் சேர்ந்த அம்சராஜன் ஆகிய இருவர் மீதும் போலீசாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் இருவரையும் தேடிச் சென்றபோது மூர்த்தி மற்றும் அம்சராஜன் இருவரும் ஏற்கனவே கோயம்புத்தூர் போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேனியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட மூர்த்தி மற்றும் அம்சராஜன் இருவரையும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பழனிச்செட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் அளித்த தகவல்கள் போலீசாரையே தலை சுற்றும் அளவுக்கு வைத்தது.
Also Read: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்.. 18 பேரின் தலைமுடியை வெட்டிய பள்ளி முதல்வர்..
நடந்தது என்ன?
அதாவது மூர்த்தி, அம்சராஜன் இருவரும் தங்களது நண்பர்களான சுரேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோருடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த 4 பேரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளை கண்காணித்து தொடர்ச்சியாக அங்கிருக்கும் பணம், நகை ஆகிவற்றை கொள்ளையடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளனர்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மூர்த்தி தனது மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய் ஆகியோருக்கு பிரித்து வழங்கியுள்ளார். இதேபோல் சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரும் பணத்தின் ஒரு பங்கு போய் சேர்ந்துள்ளது. தொடர்ந்து திருடிய பணத்தில் ராஜபாளையத்தில் ரூ.4 கோடிக்கு பழைய நூற்பாலை ஒன்றை விலைக்கு வாங்கியிருந்தனர். அதுமட்டுமல்லாமல் மூர்த்தி மற்றும் அவரது மனைவி திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால் திருட்டு வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தான் மாட்டிக் கொள்வோம் என நினைத்த மூர்த்தி, அதிலிருந்து தப்பிப்பதற்காக மனைவி அனிதா பிரியாவை வழக்கறிஞராக படிக்க வைத்திருக்கிறார். இதனிடையே கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தையும் உருக்கி தங்க கட்டிகளாக மூர்த்தி தலைமையிலான கும்பல் மாற்றியுள்ளனர். அதனை தேனி அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள முட்புதரில் பாலிதீன் பையில் சுற்றி மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தனர்.
ஆனால் அதற்கு மறுநாளே திருட்டு வழக்கில் மூர்த்தி, அம்சராஜன், சுரேஷ், அருண்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் புதைத்து வைக்கப்பட்ட தங்க கட்டிகளை எடுக்க முடியாமல் போனதாக போலீசாரிடம் அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பழனிச்செட்டிப்பட்டி போலீசார் முன்னிலையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ,49 லட்சம் மதிப்புக் கொண்ட 88 சவரன் கொண்ட மதிப்புள்ள 6 தங்கக் கட்டிள் மீட்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் உடந்தையாக இருந்த மூர்த்தியின் மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி, அவரது கணவர் மோகன் ஆகியோரை ராஜபாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த பழனிச்செட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்தார்.