H Raja: சிக்கிய ஹெச்.ராஜா.. 2 வழக்குகளில் தலா 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா, அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டிருந்தார்.
பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா, அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் முன்னிட்டு அமைப்புகள் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த வகையில் ஈரோடு நகர காவல் துறையில் கனிமொழி மீதான அவதூறு விமர்சனம் தொடர்பாகவும் கருங்கல்பாளையம் காவல்துறையில் பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தொடர்பாகவும் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த அவதூறு பேச்சு தொடர்பாக ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடத்தல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ., எம்.பி.,க்களின் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
Also Read:நேற்று ஜாமின், இன்று மினிஸ்டர்.. செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
ஆனால் சர்ச்சைகளுக்கு பெயர் போன எச். ராஜா சமூக வலைத்தளத்தில் தான் பதிவிட்ட கருத்துக்கள் தன்னுடைய அட்மின் பதிவு செய்தது என தெரிவித்தார். தனக்குத் தெரியாமல் வெளியிடப்பட்ட இந்த பதிவை நான் நீக்கம் செய்தேன் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் வன்முறையால் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்
இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு விட்டார். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜெயவேல் அமர்வில் சிறப்பு நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்த நிலையில் நீதிபதி ஜெயவேல் அமர்வு தீர்ப்பளித்தது.
Also Read: Krishnagiri: திக்குமுக்காடும் கிருஷ்ணகிரி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!
அப்போது இந்த இரண்டு பதிவுகளும் ஹெச்.ராஜா அனுப்பவில்லை என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர் குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது என நீதிபதி தெரிவித்தார்.பெரியார் சிலையை உடைப்பேன் என தெரிவித்தது மற்றும் கனிமொழி எம்பி குறித்து அவதூறு பேச்சு ஆகிய இரண்டு வழக்குகளிலும் ஹெச்.ராஜா குற்றவாளி என தீர்மானிக்கப்படுவதாக கூறினா.
ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது எனவும் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் என ரூ.10 ஆயிரம் மட்டும் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹெச்.ராஜா இந்த வழக்கில் உடனடியாக சிறை செல்ல வேண்டி இருக்கும் என்பதால் அவரது வழக்கறிஞர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதற்கேற்ப தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் என் மீதான வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் எனவும், சித்தாந்த ரீதியிலான எதிரிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். டிசம்பர் 31 ஆம் தேதி வரை அவர் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி சொந்த ஜாமீனில் நீதிபதி விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.