Tirupathur: மாணவர் புத்தகத்தில் சாதிப்பெயர் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்!
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம் மற்றும் கந்திலி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் பணியிடை நீக்கம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவனின் புத்தகத்தில் ஜாதி பெயர் எழுதிய விவகாரத்தில் ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள குனிச்சி மோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் விஜயகுமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் பற்றி பாடம் நடத்தியுள்ளார். அப்போது குறிப்பிட்ட ஒரு இசைக்கருவியின் பெயரைச் சொல்லி அதனை இந்த சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் என பாடம் நடத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில் அந்த மாணவரின் சாதி பெயரை குறிப்பிட்டு எழுதி அனைத்து மாணவர்களும் முன்னிலையிலும் தரக்குறைவாக விஜயகுமார் பேசியுள்ளார்.
Also Read: மாணவர் டூ முதியவர் வரை.. பல கோடிகள் இழப்பு.. ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’யில் தப்பிப்பது எப்படி?
பள்ளி முன்பு போராட்டம்
இதனால் மனமுடைந்த அந்த மாணவன் நேராக வீட்டுக்கு சென்று தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளான். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊர் பொதுமக்களுடன் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் விஜயகுமாரிடம் இந்த சம்பவம் பற்றி விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதி சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்திய ஆசிரியர் விஜயகுமாரை பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
ஆசிரியர் சஸ்பெண்ட்
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம் மற்றும் கந்திலி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அந்த வகுப்பில் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் விஜயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குனிச்சி மோட்டூர் பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா? என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் மாணவர்களை எதிர்கால வாழ்விற்கு நல்வழிப்படுத்தும் இடமாக பள்ளிகள் இருக்கும் நிலையில் இதுபோன்ற ஒரு சில ஆசிரியர் செய்யும் செயல்கள் அனைத்து ஆசிரியர்கள் மீதும் தவறான அபிப்ராயத்தை உண்டாக்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Also Read: UP Accident: உத்திர பிரதேசத்தில் லாரி மீது கார் மோதி விபத்து.. 5 மருத்துவர்கள் உயிரிழப்பு..
கூடலூரில் உடற்கல்வி ஆசிரியை பணியிடை நீக்கம்
இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செயல்படும் ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி பொறுப்பு தலைமை ஆசிரியையாக உள்ள சசிகலாவை அதே பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் அசிமா தாக்கியதோடு மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகள் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பொறுப்பு தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் அசிமாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.